×

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மதுரை – தேனி சாலையில் மேம்பால பணிகள் தீவிரம்: மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டம் பணிகள் வேகமடைவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

மதுரை: மதுரை – தேனி நெடுஞ்சாலையில், மதுரை நகரில் நடந்து வரும் மேம்பால பணிகள் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் இருந்து கொச்சின் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, மதுரை வழியாக செல்கிறது. இதில், மதுரை – தேனி, மதுரை – ராமநாதபுரம் மார்க்கத்தில், இச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருந்தன. சில ஆண்டுகளுக்கு முன், தேனி செல்லும் பிரதான சாலையில் காளவாசல் முதல் முடக்குச் சாலை வரையும், உசிலம்பட்டி முதல் நாகமலை புதுக்கோட்டை வரையிலான சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதிகளில் இந்த சாலை மிகவும் குறுகலாக இருந்தது. இதனால், காளவாசல் சந்திப்பு துவங்கி மூன்று இடங்களில் கடந்த 2016 முதல் 2018 வரை மூன்றாண்டுகளில் நடந்த 37 விபத்துக்களில், 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய முடியாமல் ஊர்களுக்குள் செல்வதை தடுக்கவும், 7 கி.மீ தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கவும் முடிவானது.

இதன்படி அமைக்கப்படும் புறவழிச்சாலை டிபிஎம் நகர் அருகே துவங்கி, திண்டுக்கல் – விருதுநகர் சாலையை இணைத்து, அங்கிருந்து நாகமலை புதுக்கோட்டையை அடையும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, பி.பி.சாவடியிலிருந்து விராட்டிபத்து டிபிஎம் நகர் வரை, 1.20 கி.மீ நீளம், 11 மீட்டர் அகலத்தில், ரூ.53.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள், 2020-2021ம் ஆண்டு, ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் துவங்கின. இப்பணிகளை, மாநில நெடுஞ்சாலைத்துறையின், தேசிய நெடுஞ்சாலைப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பி.பி.சாவடி திசையில் பணிகள் ஆரம்பம் முதலே வேகமாக நடந்து வந்த நிலையில், டிபிஎம் நகர் திசையில் அணுகுசாலை அமைப்பதில் துவங்கி, பல்வேறு சிக்கல்களால் பாலம் கட்டும் பணிகள், ஆரம்பம் முதலே வேகமெடுக்காமல் இருந்து வந்தது.

கடந்த, செப்டம்பர் மாதம் முடக்குச் சாலை சந்திப்பில் பாலத்தை இணைக்கும் பணிகள் துவங்கி, கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் எச்எம்எஸ் காலனி சந்திப்பில், பாதாள சாக்கடை குழாய்களை இடமாற்றும் பணிகள் சுமார் ரூ.90 லட்சத்தில் நடந்து வந்தன. தற்போது, குழாய்கள் மாற்றும் பணிகளுடன் சேர்த்து, பாலத்தின் ஒரு பகுதி கட்டுமான பணிகள், முழுவதுமாக முடிந்த நிலையில் எச்எம்எஸ் காலனி சந்திப்பில் மட்டும் பணிகள் சற்று தாமப்பட்டது. இது வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு ஆளாக்கியது.

* இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘தற்போது வரை, மதுரை நகரில் தேனி சாலையில் அமைக்கப்படும் பாலத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எச்எம்எஸ் காலனி சந்திப்பில் மட்டும் தற்போது பாலத்தை மண்மேவி இணைக்கும் பணிகள் நடக்கின்றன. அப்பணிகள் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும். மேலும், அணுகுசாலைகளை சீரமைத்து, மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதேநேரம், ரூ.112 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளும், தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில், அந்த பணிகளும் முடிக்கப்பட்டு, புறவழிச்சாலை பணிகள் துவங்கப்படும்’’ என்றனர்.

* இந்த பாலம் பணிகள் குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘‘கடந்த டிசம்பருக்குள் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பணிகள் தாமதமானது. இருப்பினும், தற்போது எதிர்வரும் மார்ச் இறுதிக்குள் பணிகள் முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை பணிகளை விரைவாக முடித்து, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருவதும், பணிகளை அதிகாரிகள் வேகப்படுத்தி இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. விரைந்து பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலம் வரவேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றனர்.

The post கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மதுரை – தேனி சாலையில் மேம்பால பணிகள் தீவிரம்: மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டம் பணிகள் வேகமடைவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Madurai-Theni ,Madurai ,Madurai – Theni ,National Highway ,Rameswaram ,Cochin ,Theni ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி